Sunday 13 November 2022

women

#பெண்கள்_அனைவருக்கும்_இந்த_பதிவு_சமர்ப்பணம் 
மணம் முடித்த நாளிலிருந்து 
மாதம் மாதம் ஒரே கேள்வி தான்
பதில் சொல்லி சொல்லியே 
பைத்தியமே பிடித்து விட்டது

ஐந்து நாட்கள் தள்ளி போனாலும்
ஆசைகள் அருவியாய்
கொட்டும்
அடுத்த நாளே கண்களில் 
மழையாய் சொட்டும்

ஆரம்பத்தில் ஆண்பிள்ளை வேண்டுமென
ஆசைபட்ட மனம் 

பெண் பிள்ளை கிடைத்தாலும் போதுமே என்றது 

கடைசியில் ஊனமாக பிறந்தாலும் 
ஓர் உயிர் ஒன்று கிடைத்தாலே பாக்கியம் தான்
 என்றே மனமும் சமாதானமானது

காலா காலத்தில் பெற்றுக்கொள்

மருத்துவரை போய் பார்த்து விடு
மனம் போன போக்கில் 
பேசியவரிடமெல்லாம்
மௌனத்தையே பதிலாக தந்தேன்

காலம் கடந்து இன்றோடு எட்டு ஆண்டு முடிந்திருந்தது

 துளிர் விட்டது சில நம்பிக்கைகள்

ஐந்து நாள் தள்ளி போனதை வைத்து ஆசையாய் காத்திருந்தோம்
ஆசைகளும் நிறைவேறியது
அம்மாவாக போகும் மகிழ்ச்சியில்
மனம் கணவரை தேடியதும்

கணவர்
நெற்றியில் முத்தம் கொடுத்தார்
நெஞ்சோடு நெஞ்சை அணைத்து கொண்டார்

அம்மாவிற்கும் தகவல் சொன்னோம் 
அவசரமாய்
ஓடி வந்தாள்
ஆனந்த கண்ணீர் வடித்தாள்
மகளை மலடி என்று சொல்லி விடுவார்களோ
மனதில் இருந்த கவலை போனாதாய் சொன்னாள்

எனக்கு மட்டும் இன்னும் கவலை இருந்து கொண்டு தான் இருந்தது
என்னை போல் இன்னும் எத்தனை எத்தனை பேர் மனதில் வலியோடு வாழ்கிறார்களோ 
கண்ணீர் தான் வந்தது

பார்க்கும் போதெல்லாம் கோபமாகும்
மாமியார் கூட
பால் தினமும் குடி
பாசமாக பேசினார்

ஆளாளுக்கு வந்து அறிவுரை சொன்னார்கள்

பத்து மாதம் சுமக்க வேண்டும்
பக்குவமாய் நடக்க வேண்டும்
பழங்களை சாப்பிடு
பார்த்து நடந்துங்கோ கணவரிடமும் கவனமாக சொல்லி விட்டு போனார்கள்

இரண்டு மூன்று நாட்களில்
இரவு நேரத்தில் 
இதயம் துடிப்பதை உணர முடிந்தது
இன புரியாத சந்தோஷத்தில் இதயம் நிறைந்தது

கருவானது
உருவானது
கண் இரண்டு
கை இரண்டு 
கால் இரண்டு
கன்னம் இரண்டு
நெற்றி 
புருவம் 
நெஞ்சம் இன்னும் எத்தனை எத்தனையோ

உதிரத்தை உணவாக்கி உடம்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்தது

உண்ட உணவு உடலில் இருக்க மனமில்லாமல் உடனடியாய் வெளியேறியது

மருத்துவர் மாதம் மாதம் கொடுத்த மருந்தும்
மரண வலியை தந்தது

வயிறு பெரியதாய் மாறி போனது 
வயிறை பார்த்து  ஆண் தான் இது
பெண் தான் இது 
ஆளாளுக்கு ஒவ்வொரு ஆருடம் 
சொன்னார்கள்

வளையல் ஓசை கேட்கும்போதெல்லாம்
வயிற்றை உதைக்கும்

ஓய்வே இல்லாமல் ஓடியாடி விளையாடிட இடம் தேடும் 

நாட்களும் நகர்ந்தது 
கை கால் எல்லாம் வீங்கி போய்
கன்னம் பெருத்து போய்
நடை தளர்ந்து 
நளினம் இழந்து
நகங்களில் கூட வலியானது

புரண்டு படுக்க கூடாது
அதிர்ந்து நடக்க கூடாது
இன்னும் எத்தனை எத்தனையோ சொன்னார்கள்
அனைத்தையும் தாங்கி கொண்டேன் 
அன்னையின் ஸ்தானத்தை அடைவதற்காக

குழந்தை பெறும் நாளையும் குறித்து கொடுத்தார்கள்
குடும்பமெல்லாம் குதுகலமாகி போனார்கள்
சுக பிரவமாகிவிட வேண்டும் என்றே
சாமி கும்பிட்டார்கள்
மருத்துவரோ குழந்தையின் எடை அதிகம்
ஆப்ரேஷன் தான் செய்யணும்
ஆணிதரமாக சொன்னார்

அடுத்த நாளே 

அப்பாவியான என் அப்பாவிடம் ஐம்பதாயிரம் வாங்கி கொண்டார்கள்

வலியும் வந்தது

உயிர் போகும் வலியா

இல்லை

உயிர் கொடுக்கும் வலியா ஒன்றும் விளங்கவில்லை

காயம்பட்டாலே துடிக்கும் என்னை
கத்தி வைத்து காயப்படுத்த ஆயத்தமானார்கள்

வலி தெரியாமலிருக்க ஒரு ஊசி
மரண வலியை தந்தது

பெண் தொட்டாலே கூச்சப்படும் என் உடம்பை
ஆண் தொட்டு ஆப்ரேஷன் செய்து கொண்டிருந்தார்
ஏதேதோ பேசி கொண்டிருந்தார்கள் 
ஒன்றும் விளங்கவில்லை

உதிரமே உடம்பில் இல்லை என்று உதிரத்தை உடம்பில் ஏற்ற உள்ளங்கையை தாண்டி ஊசியால் உடம்பை பதம் பார்த்தனர்

அப்படியும் இப்படியுமாய் அரை மணி நேரம் கழித்து
வயிற்றில் வளர்ந்த என் வைரத்தை வயிற்றை கிழித்து எடுத்தார்கள்

அழு குரல் ஓசை கேட்டு எனக்கு அழுகை வந்தது
நானும் அம்மாவாகி விட்டேன்
பிறந்த மேனியில் பிறந்த குழந்தையை பார்த்ததில் பேரானந்தம்
மகிழ்ச்சி மனமெல்லாம் இருந்த தருணத்தில்
மருந்துவர் வந்து மகள் பிறந்திருக்கா என சிரித்த முகத்தோடு சொன்னார் 

என் சிந்தனையில் ஏதேதோ ஓடியது
பெண்ணாய் பிறந்து நான் பெற்ற துன்பங்கள் எத்தனை எத்தனையோ 
நீயும் அதனை அனுபவிக்க போகிறாயோ

உடலாலும் மனதாலும் 
எத்தனை எத்தனையோ வன்முறைகள் 
இந்த உலகத்தில் நடந்து கொண்டே இருக்கிறது
இதில் இருந்து நீ தப்பிப்பாயா
அவள் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்களோடு 
மயக்கமானாள்..

#ஆண்_சமுதாயமே

உயிர்களை உயிர்ப்பிக்கும் உயர்ந்த பணியை உலகத்தில் செய்யும் பெண்களை நாம் போற்றுவோம்…
தாயாக, தாராமாக, தங்கையாக, தமக்கையாக, இருக்கும் அனைத்து பெண்களையும் நாம் மதிப்போம்…
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்