Sunday, 21 May 2023

anandham

நீ உன்னை அனுபவிக்க முடியாவிட்டால் வேறு யாருக்கும் எதை அனுபவிக்கவும் உதவ முடியாது. நீ உன்னுடன் உண்மையில் நிறைவடையாவிட்டால், நீ மற்றவர்களுக்குச் சேவை செய்ய முடியாது, மற்றவர்கள் அவர்களுடைய நிறைவை நோக்கிச்செல்ல உதவ முடியாது. நீ உனது சொந்த ஆனந்தத்தில் நிரம்பி வழியாவிட்டால், நீ சமூகத்திற்கு ஒரு ஆபத்து. ஏனெனில் தியாகம் செய்யும் ஒருவன் எப்போதும் ஒரு துக்கம் நிரம்பியவனாகவே ஆகிவிடுகிறான். 

உன் தாய் உன்னிடம் "நான் என்னை உனக்காகத் தியாகம் செய்துள்ளேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால் அவள் உன்னை சித்திரவதை செய்பவள் ஆவாள். கணவன் மனைவியிடம் "நான் தியாகம் செய்கிறேன்" என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தால் அவன் ஒரு துக்கம் நிரம்பிய சித்திரவதை செய்பவன் ஆவான். அவன் சித்திரவதை செய்வான், ஏனெனில் தியாகம் என்பது மற்றவரைச் சித்திரவதை செய்யும் ஒரு தந்திரமாகும்.

எப்போதும் தியாகம் செய்துகொண்டே இருப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். - ஆபத்து நிறைந்தவர்கள் - அவர்களைக் குறித்து விழிப்புணர்வோடிரு. மேலும் தியாகம் செய்யாதே. அந்த வார்த்தையே அசிங்கமானது. உன்னை அனுபவி. ஆனந்தத்தால் நிரம்பியிரு. நீ உனது ஆனந்தத்தால் நிரம்பி வழிகையில் அந்த ஆனந்தம் மற்றவர்களையும் சென்றடையும். ஆனால் இது தியாகமல்ல. யாரும் உனக்கு கடமைப்பவர்கள் அல்ல. யாரும் உனக்கு நன்றி சொல்லவேண்டியதில்லை. மாறாக மற்றவர்களிடம் நீ நன்றியுணர்வு கொள்வாய், ஏனெனில் அவர்கள் உனது ஆனந்தத்தில் பங்கேற்றுக்கொண்டவர்கள்.

நீ ஒளியால் நிரம்பியில்லாதபொழுது எப்படி மற்றவர்கள் ஞானஒளி பெற உதவ முடியும். சுயநலமாயிரு, அப்போது மட்டுமே பிறர்நலம் பேண முடியும். மகிழ்ச்சியாக இரு, அப்போதுதான் மற்றவர்கள் மகிழ்ச்சியாயிருக்க உதவ முடியும். நீ சோகமாகவும் துயரத்துடனும் கசப்போடும் இருந்தால் மற்றவர்களிடம் நீ பலாத்காரத்தோடுதான் நடந்து கொள்வாய். மேலும் மற்றவர்களுக்குத் துன்பத்தையே உருவாக்குவாய்.

உன்னை அனுபவிப்பதில் என்ன தவறு. மகிழ்ச்சியாய் இருப்பதில் என்ன தவறு. ஏதாவது தவறு என்றால் அது மகிழ்ச்சியற்ற தன்மைதான். ஒரு மகிழ்ச்சியற்ற மனிதன் அவனைச் சுற்றிலும் மகிழ்ச்சியற்ற தன்மையின் சிற்றலைகளைப் பரவ விடுகிறான். மகிழ்வோடிரு.
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

No comments:

Post a Comment