Saturday 22 April 2023

Death

உண்மையில் மரணம் என்பதே இல்லை.

மூன்று, வயதான மனிதர்கள் ஒரு பூங்காவில் உட்கார்ந்து தவிர்க்கவே முடியாத சாவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எழுபத்து மூன்று வயதான ஒரு கிழவர் சொன்னார்: “நான் இறக்கும் போது , எல்லோராலும் நேசிக்கப்பட்ட, ஆபிரகாம் லிங்கன் என்ற உயர்ந்த மனிதனுடன் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.' 

மற்றொரு கிழவர் சொன்னார்: " "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மனிதாபிமானி, அமைதியை விரும்புபவரான அவருடன் புதைக்கப்பட விரும்புகிறேன்''என்றார் 

பிறகு இருவரும் தொண்ணுற்று மூன்று வயதான மூன்றாவது கிழவரைப் பார்த்தனர். அவர் சொன்னார்: “நான் சோஃபியா லாரனுடன் புதைக்கப்பட விரும்புகிறேன்.

அவர்கள் இருவரும் கோபத்துடன் கேட்டார்கள் : “ஆனால் அவள் உயிருடன் இருக்கிறாள்"

அதற்கு அந்த வயதானவர் சொன்னார் : "நானும் கூடத்தான்.''

இந்த வயதானவர் அரிதானவராய் இருக்க வேண்டும். தொண்ணூற்று மூன்று வயதில் அவர் சொல்கிறார்: “நானும் கூடத்தான்," என்று.

வாழ்க்கை ஏன் சாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்? வாழ்க்கை ஏன் சாவைப்பற்றி நினைக்க வேண்டும்?

நீங்கள் உயிருடன் இருக்கும் போது பிரச்சினை எங்கே இருக்கிறது? ஆனால் மனம்தான் பிரச்சினையை உருவாக்குகிறது. பிறகு நீங்கள் குழம்பிப் போகிறீர்கள். "

சாக்ரடிஸ் இறக்கும் போது சுவாங்தஸூவிற்கு நடந்தது போலவே நடந்தது. சீடர்கள் இறுதிச் சடங்கைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் அவரை, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர்.

அதற்கு சாக்ரடிஸ் இப்படிப் பதில் சொன்னதாகச் சொல்கிறார்கள். “என்னுடைய எதிரிகள் என்னைக் கொல்ல விஷம் தருகிறார்கள். நீங்கள் என்னைப் புதைக்க திட்டமிடுகிறீர்கள்- எனவே இதில் நண்பன் யார்? பகைவன் யார்? நீங்கள் இருவருமே என் இறப்பிலேயே குறியாயிருக்கிறீர்கள். யாருமே என் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.”

மனம் எப்பொழுதும் சாவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மையில் மரணம் என்பதே இல்லை.

எப்படி என்றால், நீங்கள் இதுவரை அடுத்தவர்களின் மரணத்தையே பார்த்திருக்கிறீர்கள். உங்களுடையதை அல்ல.

அடுத்தவர்களின் மரணம் உங்களுடையது ஆகாது.

நீங்கள் பிறந்ததே உங்களுக்கு தெரியாது. பிறகு மரணம் எப்படி உங்களுக்கு தெரியும்.

நீங்கள் தான் பிறந்திருக்கிறீர்கள் உங்களுக்கு பதிலாக வேறு யாரோ இல்லை. ஆனாலும் நீங்கள் பிறந்தது உங்களுக்கு தெரியவில்லை. அடுத்தவர் சொல்லித்தான் உங்கள் பிறப்பே தெரிகிறது.

இந்த நிலையில் உங்களுக்கு மரணம் பற்றி என்ன தெரியும்.

ஆனால் விழிப்படைந்த ஞானிகளுக்கு மரணம் தான் பிறப்பும். எந்தக் கதவு வழியாக அவர்கள் வெளியே வந்தார்களோ அதே கதவு வழியாக மீண்டும் உள்ளே செல்கிறார்கள். எனவே அவர்களுக்கு மரணம் என்ற ஒன்றே கிடையாது. பிறப்பு இறப்பு இரண்டும் ஒன்றுதான்.

இருந்தாலும் மனம் சாவை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது. அதாவது எதிர்காலத்தை குறித்து.

நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலத்தில் வாழ்வதுதான் உண்மையான சாவு. எவன் நிகழ்காலத்தில் வாழ்கிறானோ அதுதான் உண்மையான வாழ்வு.

ஏன் மலர்கள் இவ்வளவு அழகாக ருக்கின்றன? எதில் அவற்றின் அழகு இருக்கிறது? அது எங்கே மறைந்திருக்கிறது?

மலர்கள் இங்கே இப்போதே வாழ்கின்றன.

ஏன் இந்த மனித முகம் இவ்வளவு சோகமாய் இவ்வளவு அசிங்கமாய் இருக்கிறது? ஏனெனில் அது எப்போதுமே இங்கே இப்போதே இல்லை. அது எப்போதுமே எதிர் காலத்தில் இருக்கிறது.

அது ஒரு பிசாசைப் போன்றது. இங்கே இப்போதே நீங்கள் இல்லா விட்டால் உங்களால் எப்படி உண்மையாயிருக்க முடியும்?

உங்களால் ஒரு பிசாசாய்த்தான் இருக்க முடியும்.

இறந்த காலத்தில் பிரவேசிப்பவராகவோ எதிர் காலத்தில் நுழைபவராகவோ தான் இருப்பீர்கள்.

நிகழ்காலமே வாழ்வு. நிகழ்காலமே தெய்வீகம்.

அந்த நிலையில் மரணம் என்பதே இல்லை.

ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

No comments:

Post a Comment