Thursday 30 January 2014

jagadeesh krishnan

படையை வைத்து ஒடுக்கிவிட்டு ..

2009 ஜனவரி இறுதியில் சிங்கள இராணுவத்திடம் முல்லைத்தீவு வீழ்ந்தது என்ற செய்தி வந்தவுடன் எங்கே தமிழக சட்டமன்றத்தில் அமளி ஏற்படுமோ என்று அஞ்சி முதுகு வலி என்று காரணம் கூறி போரூர் மருத்துவமனைக்கு சென்று படுத்துக்கொண்டார் அன்றைய தமிழக முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி.

பரிசோதித்த மருத்துவர்கள் சொல்லிகொடுத்தது போலவே 'நாங்கள் பல நாட்களாக முதலமைச்சரை ஓய்வெடுக்க அறிவுறுத்தினோம் ஆனால் அவர் ஓயாமல் உழைத்ததால் அவருக்கு முதுகு வலி வந்துவிட்டது. ஆனால் பயப்பட ஒன்றும் இல்லை, நான்கைந்து நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வீடு திரும்பலாம்' என பத்திரிகையாளரிடம் கூறினர்.

இந்த சமயத்தில் வந்ததுதான் முத்துகுமார் வடித்த நான்கு பக்க கடிதம். தமிழனின் எதிர்கால உலக அரசியல் முதல் புறங்கை நக்கியவரின் கடந்தகால உள்ளூர் அரசியல் வரை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை தன் அரசியல் அறிவைக்கொண்டு வடித்திருந்தான்.

தமிழகத்தில் அப்துல் ரவூப் முதல் 'நாம் தமிழர்' மணி வரை தொடரும் ஈகையர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டிருக்க காரணம் தமிழர்களுக்கு எதிராக நிலவும் அரசியல் சூழலை எதிர்க்க நம்பிக்கை கொடுக்கத் தவறிய அரசியல் தலைவர்களின் இயலாமை. ஆனால் முத்துகுமார் இந்த ஈகையர்களின் பட்டியலில் மாறுபட்டவன். போராட்டக்காரர்களுக்கு பாதை காட்டிய ஒளி.

70 வருட அரசியல் தந்திரத்தைக் கொண்டு முத்துக்குமாரை அவசரவசரமாக எரியூட்டினார் முதலமைச்சர் கருணாநிதி. கொதித்தெழுந்த மாணவர்களைக் கண்டு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டார். 'புறங்கையை நக்கியவனே' என்ற முத்துகுமாரின் பேனா மையின் வெப்பத்தை தாளாமல் '5 நாட்களில் வீடு திரும்புவார்' என்ற அறிவிப்புடன் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி 300 சதுரஅடி அறைக்குள் ஏறக்குறைய 35 நாட்கள் பதுங்கியிருந்தார்.

'ஐயோ ஈழத்தில் உயிர்கள் ஆயிரக்கணக்கில் போகுதே காப்பாற்றுங்கள்' என வீதிக்கு வந்து போராடியவர்களை தன்னுடைய காவல் படையை வைத்து ஒடுக்கிவிட்டு இன்று சுபவீ மற்றும் வீரமணிக்கு பின்னால் ஒளிந்துகொண்டு 'டெசோ' மாநாட்டை டெல்லியில் நடத்துகிறார். அண்மைச் செய்தி - காங்கிரசும் டெசோவில் கலந்து கொள்கிறது. டெசோ மாநாட்டில் ராஜபக்சே கலந்துகொள்வார் என்ற செய்தி வந்தாலும் ஆச்சர்யம் ஏதும் இல்லை. துரோகம் !

www.eelavenkai.blogspot.com

No comments:

Post a Comment