இலக்கண வரம்பினுள் அடங்காத உள்நோக்க வினா!
வினாக்கள் அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என ஆறுவகை என்பர் தமிழ் இலக்கண அறிஞர்கள்! இங்கு கேட்கப்பட்ட இவ்வினா இந்த ஆறு வகையிலும் இல்லை.
எனவே, வேண்டுமென்றே, தமிழகத்தின் தொல்சமயமான சைவ சமயத்தின் முதற்குரவர் திருஞான சம்பந்தர் பெருமானின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கவேண்டும் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டி வினவப்பட்ட இவ்வினா, உள்நோக்கங்கொண்ட 'குற்றச்சாட்டு வினா' என்ற புதிய வகை வினாவை Quora தமிழ் தளத்தின் மூலம் ஏவப்பட்டுள்ளது!
சைவசமயக் குரவர் திருஞானசம்பந்தரை இழிவுசெய்யும் உள்நோக்கம்!
சைவ சமயக் குரவர்கள் நால்வரில், முதன்மைக் குரவரான திருஞான சம்பந்தர் மீது வேண்டுமென்றே வலிந்து இக்குற்றச்சாட்டை சுமத்தவேண்டும் என்ற ஒரு கேவலமான உள்நோக்கம் இக்கேள்வியில் இருப்பதாகப் படுகிறது.
இங்கு தரப்பட்டுள்ள வலிமையான உண்மைப் பொருள் உரையால் அந்நோக்கம் நிறைவேறப்போவது இல்லை.
"திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுவது ஏன்?" என்ற வினா "பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே" என்ற தேவாரத்தின் பொருள் தவறான புரிதலினால் கேட்கப்பட்டிருந்தால் நான் இங்கு கொடுத்திருக்கும் விளக்கம் பயனுள்ளதாக இருக்கும். வினாத் தொடுத்தவரோ, தீர்ப்பை எழுதிவிட்டு, வாதத்தை முன் வைக்கிறார். தொடுத்தவரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது வினாவின் தொனி!
திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுகிறார் என்பது உண்மையா?
‘கற்பு’ என்ற சொல்லுக்கு கல்வி, கற்பனை, நீதிநெறி, மகளிர்நிறை, மதில், முறைமை, விதி, முல்லைக்கொடி என்னும் பல அர்த்தங்கள் தமிழ் மொழி அகராதியில் (பதிப்பு: நா. கதிரைவேற்பிள்ளை) உண்டு. இவைகளில், அந்தப் பதிகம் எந்தப் பொருள்பற்றிப் பாடப்பட்டதோ, அதற்கேற்ற பொருள்கொள்வதே கற்றோர்க்கு சிறப்பு.
‘அறிவு ஜீவிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்தவேண்டிச் செய்யும் செப்படி வித்தையோர் மலிந்துவிட்டனர்.
கற்பு என்பது கற்றலையும், கற்பித்த வழி நிற்றலையுமே குறிக்கிறது. பெண்களுக்குப் பெற்றோரும் ஆசிரியரும் கற்பித்த வழி நிற்றலே கற்பெனப் போற்றி வந்துள்ளனர்.
“கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை” என்னும் கொன்றைவேந்தன் 14ஆம் வரியும் நினைவு கூறத் தக்கது.
கற்பு என்ற சொல், பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும் வருவது காணலாம்.
பாண்டிய மன்னனின் வெப்புநோய் தீர்த்த திருஞானசம்பந்தப் பெருமானை சமணர்கள் வாதத்திற்கு அழைத்தபோது அவர் மதுரைத் திருக்கோயிலுக்குச் சென்று சொக்கநாதர் சந்நிதியில் “காட்டுமாவதுரித்து” என்று தொடங்கும் பதிகம் (தி. 3 ப. 47 பா.1) உலகோர்க்கு அருளி, இறைவனை வழிபட்டார்.
இந்தப் பதிகம் திருஞானசம்பந்தப் பெருமானால் ஆலவாய் உறையும் சிவபெருமானிடம் சமணர்கள் ஏற்படுத்தியுள்ள தப்பான கற்பிதங்களை(முறைமைகளை)அழிக்க திருவுள்ளம் கொள்க என்று வேண்டுமாறு பாடப்பட்டுள்ளது.
இவ்வினாவில் குறிக்கப்பட்ட திருஞானசம்பந்தர் தேவாரத்தில் 'கற்பு' ஈனும் சொல் "கல்வி, அறிவு, கொள்கை நிலை, கொள்கை உறுதி" ஆகிய பொருள்களில் வருகின்றது.
திரண்ட பொருளாக, "அமணர் என்னும் அறிவிலிகளின் உள்ளத்தில் ஆழந்திருக்கும் சமண மதக் கல்வியை, கொள்கையை, உறுதியை, வேரோடு அழிப்பதற்கு சிவபெருமானே! நின் திருவுள்ளம் ஆயத்தம் தானே?" என்று வினவுவதாக அமைந்துள்ளது இத்தேவாரப் பாடல்!
பெண்அகத்து எழில்(அழகான பெண்ணுள்ளம் கொண்ட) - உள்ளத்தில் வலுவற்ற, சாக்கியப்பேய் அமண் தெண்ணர் - உடல்வலிமை கொண்ட பேய்ச் சமணர், கற்பழிக்கத் திருவுள்ளமே - கற்ற நீர்மையில்லாத கல்வியின் செயலை அழிக்கத் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதே பொருள்!
கொச்சைமொழி வசவும் இலக்கிய வசவும்!
'பொட்டப் பேய்ப் பயல்! சமணக்-குண்டன்!' என்ற கொச்சைமொழி வசவுக்கு இணையான, இலக்கியமொழி வசவுதான் 'பெண்அகத்து-எழில் சாக்கியப்பேய்!'-'அமண்-தெண்ணர்!' என்ற தொடர்!
அருஞ்சொற்பொருள்: அகம் - உள்ளம்; எழில் பெண் அகத்து சாக்கியப்பேய் - அழகிய பெண்ணுள்ளம் கொண்ட சாக்கியப்பேய்; அமண்-தெண்ணர் - சமணக் குண்டர்.
பாடல் இதோ:
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திரு ஆலவாயாய் அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய் அமண் -
தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே.
இங்கு கற்பு என்பதற்கு மகளிரின் ஒழுக்க நெறிகள் என்று பொருள் கொள்வது முற்றிலும் பொருந்தாது.
தருமை ஆதீனக் குரு முதல்வர் குருஞானசம்பந்தர் சிவபோகசாரம் என்னும் நூலில் அருளியுள்ள 'கற்பு' என்ற சொல் வரும் ஒரு பாடல் காண்போம்::
நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதியிலார் செய்தவமும் பூரணமாம் - சோதி
கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்த
விழல்எனவே நீத்துவிடு. - - சிவபோக. பா. 130
இப்பாடலில், 'சோதிக் கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்தவிழல் எனவே நீத்துவிடு!' என்பது 'இறைவனின் திருவடிகளை அறியாத குருவும், திருமுறைகளைக் கல்லாத சீடனும் பாலைநிலத்துக்கு ஒப்பானவர்கள்! எனவே, அவர்களை விலக்கிவிடு! என்று குறிப்பதைக் காண்க!
சிவபோகசாரம் பிற்காலச் சைவ இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவநம்பிக்கைவாதிகளுக்காக, சங்ககால இலக்கியமான பதிற்றுப்பத்தில் இருந்தும் ஒரு சான்று காட்டுகிறேன்!
"இரவல் மாக்கள் சிறுகுடி பெருக
உலகந் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை" (பதிற்றுப்பத்து: 59:7-9)
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக - பரிசில் வேண்டித் தம்மிடம் வந்த மக்களின் சிறுகுடில்கள் வளம்பெற்று உயருமாறு
உலகந் தாங்கிய மேம்படு கற்பின் - உலகத்தைக் காக்கும் மேம்பட்ட கல்வியை (கொள்கையை) உடையவனும்
வில்லோர் மெய்ம்மறை - வில்லாளியின் உடலைப் பகைவர்களிடமிருந்து காக்கும் கவசம் போன்றவனுமாகியவனே" என்று ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேரப் பேரரசனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார்.
இங்கு, 'மேம்படு கற்பின்' என்ற சொற்கள் 'மேம்பட்ட கல்வி' என்ற பொருளில் பயின்று வருவதைக் கண்டு மகிழுங்கள்!
பதிற்றுப்பத்தின் எட்டாம் பதிகம் பத்தாம் பாடலில் வரும் இரண்டு பாடல் வரிகள் இப்போது உங்களுக்காக மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன.!
"....நல்லிசைத் தொலையாக் கற்ப!
நின் தெம்முனையானே" -
நல் இசை = நல்ல புகழ்; தொலையாக் கற்ப = அழியாத கல்வி உடையவனே!
நின் தெம்முனை யானே! - நின் போர்முனையில் யானே உள்ளனன்!
"நல்ல புகழையும் உடைய அழியாத கல்வியையும் உடையவனே!.நின் போர் முனையில்.. யானே உள்ளனன்"
என்று பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடிய சங்கப்பாடல் அவநம்பிக்கைவாதியின் வாயையும், அவதூறு பரப்புவோர் வாயையும் உறுதியாகக் கட்டிப் போடும்!.
'ஓதி ஓத்தறியா'?!?!!! அய்யோ! கேவலமான கெட்ட வார்த்தை!
தப்பாக சமணர் 'முறைமை-கற்பிதம்-விதி' செய்ததை அழிக்க திருவுள்ளம் கொள்க என வேண்டும் பாடலையே இத்தமிழ்ப் பேரறிஞர்கள் இப்படிப் பொருள் கொண்டால், 'ஓதி ஓத்து அறியா' என்ற சொற்கள் வரும் அடுத்த தேவாரப் பாடலுக்கு என்ன பொருள் கொள்வாரோ என்று அச்சமாக உள்ளது! அடுத்த பாடல் இதோ:
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!
'ஓத்து' என்ற சொல்லுக்கு 'மறை', எனத் தமிழ்அகராதி பொருள் கூறுகின்றது. 'ஓத்து' என்ற சொல்லுக்கு, இக்'கேள்வியின் நாயகர்' அறிந்த 'தற்காலத்துப் பொருளை பொருத்தினால் 'ஓதுதலும், பாலியல் புணர்வும் அறியாத சமணர்களை வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளம் கொள்க!' என்றல்லவா பொருளாகிவிடும்?
ஆரியகுலத்தில் அவதரித்தும், 'ஆரிய வேதம் நான்கினும் உயர்ந்த மெய்ப்பொருள் 'நமச்சிவாயவே!' என்று முழங்கினார்!
திருஞான சம்பந்தர் ஆரிய கவுணிக கோத்திரத்தில்(சரவடியில்) ஆரியப் பிராமணரான சிவபாத இருதயருக்குக் குழந்தையாக அவதரித்தவர்!
ஆரியரின் வேதம் நான்கைக் காட்டிலும் உண்மையான மெய்ப்பொருள், 'நமச்சிவாயவே' என்னும் எம் நாதன் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருநாமமே! என்று “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று முழங்கியமையால், சைவ சமயத்தின் முதல் சமயக்குரவர் என்று வணங்கப்படுகின்றார் திருஞான சம்பந்தர்!
“தமிழ் மறைமொழி” என்று முழங்கிய “திருநெறிய தமிழ் ஞானசம்பந்தர்”
“தமிழ் மறைமொழி” என்றும், தன்னைத் “திருநெறிய தமிழ் ஞானசம்பந்தன்” என்றும் தம் தேவாரப் பாடல்கள் நெடுகிலும் முழங்கினார் பெருமான்.
சாதியத்தை உடைத்த தமிழ் ஞானசம்பந்தன்!
தாழ்த்தப்பட்ட இனத்தில் அவதரித்த திருநீலகண்ட யாழ்ப்பாணருடனேயே அனைத்து சிவாலயங்களுக்கும் பயணித்து, அவருடனேயே வாழ்ந்து, அவரை ‘ஐயரே’ என்று அழைத்தவர் திருஞானசம்பந்தர் பெருமான்.
'ஆரிய பிராமணர்' குலத்தில் அவதரித்து, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று தமிழ்மறை திருக்குறள் போற்றும் 'தமிழ் அந்தணராக' தமிழகமெங்கும் உலா வந்தவர் திருஞானசம்பந்தர் பெருமான்!
ஏழாம் நூற்றாண்டிலேயே சாதியத்தை உடைத்துப் புரட்சி செய்து வாழ்ந்து காட்டியவர் திருஞானசம்பந்தப் பெருமான்.
களப்பிரர்களால் கீழ்நிலையடைந்திருந்த தமிழையும் சைவத்தையும் ஒருங்கே வளர்த்தவர்.
பெருமான் திருஞானசம்பந்தரின் தேவாரத்தைக் கொச்சைப்படுத்தி கீழ்த்தரப் பொருள் உரைப்பவர்களை தமிழன்னை மன்னிக்கவே மாட்டாள்; வரலாறும் அவர்களைப் புறம் தள்ளும்.
திருநெறி என்பது ‘வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதம் நாமம் நமச்சிவாயவே’ என்று உணர்வதும், ‘தமிழே அத்திருநெறி சாற்றும் வேத மொழியாம்’ என்று உணர்த்தவே, ‘ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறியதமிழ்’ என்றும் ‘ஆணை நமதே!’ என்றும் திருக்கடைக்காப்புச் பாடல்களில் ‘இறைவன் உரையே தன்னுரையாம் என்னும் இறைஆணை – GOD’s ORDER – G.O’ அருளிச்செய்தார் திருஞானசம்பந்தர் பெருமான்.
ஒவ்வொரு பதிகத்தின் திருக்கடைக்காப்பும் இவ்வுயரிய ஞானத்தை வழங்கவே திருஞான சம்பந்தரால் அருளப்பட்டது என்று உணர்க.
வினாவின் இரண்டாம் பகுதியான "வரலாறு நெடுக மதம் என்பது வன்முறை சார்ந்தே வளந்திருக்கலாம்! அது அன்பை போதிக்கிறது என பொய்யுரைகள் புகல்வதேன்?" என்பதும் 'குற்றச்சாட்டு வினா' சார்ந்ததே! ஆனால் பொத்தாம் பொதுவாகச் சொல்வதால், விடை சொல்லும் தேவை இல்லை.
‘என்னை நன்றாக இறைவன் செய்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!’ என்ற நம்பிரான் திருமூலரின் திருவாக்கும், திருஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கும் ஒன்றேயன்றோ?
By
K. Jagadeesh
No comments:
Post a Comment