Sunday 21 June 2015

தோளில் சுமந்து உலகை காட்டுபவர் - தந்தை!

தோளில் சுமந்து உலகை காட்டுபவர் - தந்தை!
ன்னை தன் வயிற்றில் பத்து மாதங்கள் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த அன்னை அறிமுகப்படுத்தும் முதல் வி.ஐ.பி. அப்பா. எட்டி உதைத்த கால்களை கட்டி அணைத்து முத்தமிட்டு பூரித்து போவார்.
தந்தை என்பவர் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். வாழ்க்கைச் சக்கரத்தில் நாம் வசதியாக வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்பு சக்கரம். நாம் எழுமுன் வேலைக்கு சென்று, நாம் தூங்கிய பின்பு வீடு திரும்பும் தன்னலமில்லா உள்ளம்.

அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது.

பிரசவ அறையின் வாசல் முதல், தன் பிள்ளையை கல்லூரி சேர்க்கும் வரை கால் கடுக்க காத்திருப்பவர் தான் தந்தை. தன் குழந்தைகள் வண்ண வண்ண சட்டைகள் அணிய தம் வாழ்வின் பெருவாரியான நாட்களில் கந்தை சட்டையும், பனியனுமே அணிந்திருப்பார். தமக்கு ஆடை வாங்கும்போது விலையையும், குழந்தைகளுக்கு வாங்கும்போது தரத்தையும் பார்ப்பவர்.

பிள்ளைகளின் பழக்க வழக்கம், பண்புக்கு ரோல் மாடலே அப்பா தான். அப்பாவின் அன்பு ஆழமானது. சில சமயங்களில், அந்த அன்பு ரகசியமாகி விடுகிறது. ஒரு சில நேரங்களில் தந்தையிடமிருந்து அர்சனை, கண்டிப்பு என்று இருந்தாலும் அவை தான் எதிர்கால வாழ்க்கைக்கு பாடம். இதனால் கண்டிப்பானவர், வளைந்து கொடுக்காதவர் என்று பெயர். ஆனால். பிள்ளைக்கு காய்ச்சல், உடல்நலக் குறைவு என்றால் அவர்கள் தூங்கும் போது அவர்களுக்கே தெரியாமல் கால்களை நீவிவிட்டு நலம் விசாரிக்கும் அன்பு உள்ளம். பிள்ளைகள் சாப்பிடாமல் தூங்கி விட்டால், எழுப்பி சோறூட்டி மீண்டும் தூங்க வைப்பார். பிள்ளைகளின் தூக்கத்தில் தந்தையின் அன்பு மறைந்திருக்கும். தன் குழந்தைகளைப் பற்றி பிறரிடம் பெருமையாக பேசி அளவில்லா மகிழ்ச்சி கொள்வார்.

அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாய்க்கும் ஈடாகாது. அப்பாவின் கரம் பிடித்து நடக்கையிலே, கவலைகள் அனைத்தும் மறந்து போகும். பிள்ளைகள் துவண்ட போதும், 'நான் இருக்கிறேன், எதற்கும் கவலைப்படாதே' என்னும் நம்பிக்கையை தோற்றுவித்து. தன் பிள்ளையின் நிழலாகவே இருப்பார். தந்தை தனது குழந்தைக்கு பிரச்னைகளை எதிர்கொண்டு போராடும் எதிர்நீச்சலை கற்றுத் தருகிறார்.
சிந்தனைகளை கொஞ்சம் ஓடவிட்டு பாருங்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன் பிள்ளைகளை ஆளாக்க தான் பட்ட துயரங்கள் கண்களை கலங்க வைக்கும். தனக்கு படிப்பு வாசனை இல்லாவிட்டாலும் தன் குழந்தைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று கனவு காண்பர். அவரின் வியர்வை துளிகளை பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உரமாக்கியவர். எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள்மீது படாமல், அனைத்தையும் தம் தோளில் சுமப்பவரே தந்தை. தந்தை தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று தோளில் சுமந்து உலகை காட்டுபவர்.

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில், நரம்பு தெரியும் கைகளில், நரை விழுந்த தலைமுடியில் அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாக குடிகொண்டிருக்கிறது.

தன் மகனோ, மகளோ வளர்ந்து பெரியவனான பிறகும் சிறு பிள்ளையாகவே பார்க்கிறார். 'நான்பட்ட கஷ்டம் என் பிள்ளைங்க படக்கூடாது' என பாடுபடும் தந்தைக்கு நாம் தந்தையர் தினத்தன்று கொடுக்கும் விலை மதிப்பற்ற பரிசு அன்பான வார்த்தைகளே.
by
k.jagadeesh

No comments:

Post a Comment